இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்: சிறை அதிகாரிகளுக்கு அவசர எச்சரிக்கை!
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்து நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்ட கைதிகள் மீது இடம்பெறுவதாகக் கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளை உடனடியாக நிறுத்துமாறு கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில்,
“நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள், அங்குள்ள சிறை அதிகாரிகளால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்படுவதுடன், பல்வேறு சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
தடுப்புக்காவலில் உள்ள கைதிகளுக்கு எதிராக இவ்வாறான வன்முறைகளைப் பயன்படுத்துவது அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும். எனவே, இத்தகைய மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அவர்களைக் கையாளும் போது சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளைப் பின்பற்றுமாறும் பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகளிடம் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
.jpg)