எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை ; 11 மாவட்டங்களில் விசேட ஒழிப்பு திட்டம்!
தற்போது நிலவும் வானிலை மாற்றங்களுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
எனவே, டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுத்து வரும் ஒழிப்புத் திட்டங்களுக்கு பொதுமக்கள் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை நுளம்புகள் பெருகாத வகையில் சுத்தமாக வைத்திருக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதும் நிலவும் டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு, 11 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் இன்று (16.07.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட ஒழிப்புத் திட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு குறித்த மாவட்டங்களை மையப்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
