எதிர்வரும் மாதங்களில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும்!
இலங்கையில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கவும் எதிர்வரும் மாதங்களில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், QR மற்றும் ஒதுக்கீட்டு (Quota) முறைமைகள் மூலம் எரிபொருள் பயன்பாடு ஏற்கனவே ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும், அது நாட்டின் தேவைக்கேற்ப போதுமானதாக இல்லை என குறிப்பிட்டார்.
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வின் காரணமாக இலங்கை அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை எரிபொருள் இறக்குமதிக்காக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, ஜனவரியில் 186 மில்லியன் அமெரிக்க டொலர், பெப்ரவரியில் 97 மில்லியன் அமெரிக்க டொலர், மே மாதத்தில் மட்டும் 524 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடருமானால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நீண்டகால சுமை ஏற்படும் என்பதால், எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து QR முறைமையின் அமலாக்கத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
