எபோலா வைரஸ் தொடர்பில் இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - விமான நிலையங்களில் தீவிர சோதனை!
எபோலா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய அபாயகரமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான ஆரம்ப கட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.
இன்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சுகாதார அமைச்சு தேவையான ஆயத்தத் திட்டங்களையும் ஒத்திகைகளையும் ஏற்கனவே முன்னெடுத்து வருவதாக கூறினார்.
எபோலா வைரஸ் பதிவாகியுள்ள கொங்கோ மற்றும் உகண்டா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் தொடர்பாக விசேட கண்காணிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வரும் பயணிகள் சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் பிரிவினால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் காணப்படும் நபர்கள் குறித்து உடனடியாக தொற்றுநோயியல் பிரிவுக்கு தகவல் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
எபோலா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அனுமதித்து தேவையான சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள IDH வைத்தியசாலை முழுமையாக தயார் நிலையில் இருப்பதாகவும் விசேட நிபுணர் மேலும் தெரிவித்தார்.
