அரச நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை!


அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் கடந்த மே 15ஆம் திகதி சிறப்புச் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கை அமைச்சக செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், கழகத் தலைவர்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்களின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்வனவும் பயன்பாடும் மே 31ஆம் திகதி முதல் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை அனைத்து நிறுவனத் தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் வழிகாட்டுதல்களும் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து பொது நிறுவனங்களும் ‘3R’ என்ற கொள்கையை, அதாவது குறைத்தல் (Reduce), மீண்டும் பயன்படுத்துதல் (Reuse), மறுசுழற்சி செய்தல் (Recycle) ஆகிய நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.