மகனைத் தேடிச் சென்ற தாய் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!


கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகிலுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்ததில் தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 10 வயது மகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தாயும், காணாமல் போயுள்ள சிறுமியும் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (28) இரவு, குறித்த பெண்ணின் மகன் மீன்பிடிக்க துபார வாவி பகுதிக்குச் சென்றிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த தாய் தனது 10 வயது மகளுடன் மகனைத் தேடி நள்ளிரவில் வெளியே சென்றுள்ளார்.

அப்போது, இருள் சூழ்ந்த பகுதியில் தேடிக்கொண்டிருந்த போது இருவரும் துபார வாவிக்கு அருகில் தோண்டப்பட்டிருந்த ஆழமான விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து, மீட்புக் குழுவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 45 வயதுடைய தாயின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கிணற்றுக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள 10 வயது சிறுமியைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.