நாட்டில் 53,000 ஐ தாண்டிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் டெங்கு நோய் பரவல் தற்போது தீவிரமடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த வருடம் ஜனவரி 1 முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேபோல், இதுவரை 31 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் 19,318 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை கவலைக்கிடமான அதிகரிப்பாகக் காணப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஐந்து மாதங்களில் மாதமொன்றுக்கு 10,000க்கும் குறைவாகவே நோயாளர்கள் பதிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் அடிப்படையில், நாட்டில் 124 பிரிவுகள் தற்போது டெங்கு அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அதிகளவான நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணம் காணப்படுகின்றது. அங்கு மட்டும் 27,833 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த எண்ணிக்கையின் 52.36% ஆகும்.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் கடுமையாக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
