நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோய் பரவல் – நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!


தொடர்ச்சியான மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தப் பிரிவு இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் ஜூன் 28 வரை நாடு முழுவதும் மொத்தமாக 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் 19,318 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். இதற்கு முன் கடந்த ஐந்து மாதங்களில் மாதமொன்றுக்கு 10,000க்கும் குறைவாகவே நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

நாட்டில் 124 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தற்போது டெங்கு அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாகாண வாரியாகப் பார்க்கும்போது, அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு மட்டும் 27,833 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது மொத்த எண்ணிக்கையின் 52.36% ஆகும்.

தற்போதைய சூழ்நிலையில், டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றவும், நுளம்பு முட்டைகள் மற்றும் புழுக்களை அழிக்கவும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் பல வைத்தியசாலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், தினமும் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதால் டெங்கு சிகிச்சை வார்டுகள் நிரம்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்தில் நிலைமை மிக மோசமடைந்துள்ளதுடன், காலி, மாத்தறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெங்கு நோயாளிகளுக்கு வீட்டில் சிகிச்சை அளிப்பது ஆபத்தானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் வைத்தியர் பிரபத் சுகததாச எச்சரித்துள்ளார். டெங்கு நோயாளிகள் கட்டாயமாக மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் நோயாளர்களின் எண்ணிக்கை காரணமாக சுகாதார அமைப்பு கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.