புதிய வகை டெங்கு வைரஸ் காரணமாக நோய் பரவல் அதிகரிப்பு – பிரதமர் ஹரிணி அமரசூரிய


டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது புதிய வகை டெங்கு வைரஸ் காரணமாகவே என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய வைரஸ் தொற்றால் நோய் பரவல் அதிகரித்திருந்த போதிலும், அதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அதன் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படுகிறது” என்றார்.

மேலும், மஹரகம மற்றும் கொழும்பு நகரை ஒட்டிய பகுதிகளில் டெங்கு பரவல் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும், வீடுகளை விட பொது இடங்கள், குறிப்பாக பாடசாலைகள், அலுவலக வளாகங்கள் மற்றும் பாழடைந்த வெற்று நிலங்களில் நுளம்புகள் பெருகும் நிலை அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இடங்களிலும் டெங்கு பரவக்கூடிய சூழல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்றைய தினமும் (27) நாட்டின் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சில அரச நிறுவன வளாகங்களிலும் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.