தாதியர் நியமனம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!


இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2,847 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று முற்பகல் அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்ற கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் 2021ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்த மாணவத் தாதியர்களுக்கான தொப்பி அணிவித்தல் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், 2028ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,949 பேருக்கும், அதே ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் 2,920 பேருக்கும் தாதியர் நியமனங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், 2030ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவைக்காக மொத்தமாக 13,600 பேரை ஆட்சேர்ப்பு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 50% இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தாதியர் சேவையில் இணையும் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வரும் தாதியர் பயிற்சிப் பாடசாலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து திட்டமிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.