இன்றிரவு முதல் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!


இன்றிரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.

இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் பாதிப்புகள் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் அவதானமாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்பகுதிகளைப் பொறுத்தவரை, காற்றின் வேகம் பொதுவாக மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை காணப்படும். எனினும், மன்னார் வழியாக சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாக குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகளும் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.