பாதுகாவலர்களைக் கட்டிவைத்து மொரகஹஹேன கிராமிய வங்கியில் கொள்ளை – பெருமளவு தங்க நகைகள் அபகரிப்பு!


களுத்துறை மாவட்டம் மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் இன்று (23) அதிகாலை துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிப்போட்டுள்ளனர்.

இதன் பின்னர், வங்கியின் பின்புறத்தில் அமைந்திருந்த குளியலறை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த அவர்கள், பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த தங்க நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொள்ளையுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.