எரிபொருள் விலை குறைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்!


உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே உள்நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், உலக சந்தையின் தற்போதைய நிச்சயமற்ற நிலை காரணமாக எரிபொருள் விலை குறைக்கப்படும் திகதியை தற்போது உறுதியாக அறிவிக்க முடியாது என குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் உத்தியோகபூர்வமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் பின்னர் உலக பொருளாதார சூழ்நிலை சாதகமாக மாறினால் அதன் பயன்கள் மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், ஜூன் மாதத்துடன் முதற்கட்ட எரிபொருள் மானிய காலம் நிறைவடைவதாகவும், தற்போது உலக சந்தை மாற்றங்களை அவதானித்து வருவதாகவும் தெரிவித்தார்.

உலக சந்தையின் சாதகமான மாற்றங்களை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்க மக்களுக்கு எரிபொருள் நிவாரணங்கள் வழங்கப்படுவது அவசியம் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.