டெங்கு பரவல் அதிகரிப்பு: 14 மாவட்டங்களில் 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதான வலயங்களாக அறிவிப்பு!
நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தவும் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விசேட அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, மேல் மாகாணமே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், பத்தரமுல்ல, மகரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவெலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொடஉயன, கொத்தடுவ உள்ளிட்ட பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதானமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, சீதுவை, களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான, மஹர உள்ளிட்ட பல பகுதிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வாதுவை, களுத்துறை மற்றும் பாயாகல ஆகிய பகுதிகளின் பிரிவுகள் அதிஅவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், பதுளை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இந்த அதிஅவதான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
