பேருந்துக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பேருந்து போக்குவரத்து சங்கங்கள் அவசரக் கூட்டம்!


டீசல் விலை அண்மையில் இரண்டு கட்டங்களாக அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பேருந்து போக்குவரத்துடன் தொடர்புடைய அனைத்து சங்கங்களும் இன்று (02) அவசர கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளன.

முதலில் 12 ரூபாவாலும் பின்னர் 24 ரூபாவாலும் டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், பேருந்துகளின் ஆரம்பக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், அந்தக் கோரிக்கையை தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அனைத்து பேருந்து போக்குவரத்து சங்கங்களும் இன்று அவசரமாக கூடவுள்ளன.

பேருந்துக் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படலாம் என பெரும்பாலான சங்கங்கள் தெரிவித்துள்ளன.