குழந்தையைக் காரணம் காட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தாய் : ஒன்றரை வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற அத்தை மகன்!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத் மாவட்டத்தில், திருமணத்திற்கு தடையாக இருந்ததாகக் கூறி ஒன்றரை வயது குழந்தை கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்த தம்பதியருக்கு ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒருவர் இருந்துள்ளார்.
இதற்கிடையில், குழந்தையின் தாயாருக்கும் அவரது உறவினரான அத்தை மகனுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வற்புறுத்தியபோது, குழந்தையைக் காரணம் காட்டி தாயார் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
மிட்டாய் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற உறவினர்
கடந்த வெள்ளிக்கிழமை, தாயார் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த அத்தை மகன் குழந்தைக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், வழியிலேயே குழந்தையை பலமுறை தரையில் அடித்து கொலை செய்ய முயன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதையடுத்து, சந்தேகநபர் குழந்தையை வீதியோரத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கை
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, மைன்புரி வீதி பகுதியில் சந்தேகநபரை சுற்றிவளைத்தபோது, அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு நடவடிக்கையில் சந்தேகநபரின் காலில் காயம் ஏற்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, ஷிகோஹாபாத் பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
