தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!


நுவரெலியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று (31) வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் முட்டை சேர்க்கப்பட்ட சோறு பொதியை உணவாக உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால், அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது அவர்களின் உடல்நிலை முன்னேற்றமடைந்து வருவதாகவும், எவருக்கும் ஆபத்தான நிலை இல்லை எனவும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.