கடல் மார்க்கமாக வந்த 3.9 கோடி பெறுமதியான பியூட்டி கிரீம் கடத்தல் - 4 சந்தேகநபர்கள் கைது!


இந்தியாவிலிருந்து இரகசியமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான தோல் பராமரிப்பு கிரீம்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில், இந்தியக் கடற்பரப்பிலிருந்து 3 அதிவேக டிங்கி படகுகள் மூலம் இந்தப் பொருட்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பின்னர், கடற்கரையில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் பொருட்கள் ஏற்றப்பட்டு விநியோகத்திற்குத் தயாரான நிலையில், அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிட்டிப்பனை பகுதியைச் சேர்ந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்களின் பெறுமதி மற்றும் இதன் பின்னணியில் செயற்பட்டிருக்கக்கூடிய சர்வதேச கடத்தல் வலையமைப்பு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.