ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் பஸ் கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 முதல் அமுல்படுத்த நடவடிக்கை!


ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் பஸ் கட்டணத் திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த கோரிக்கை நேற்று (24) எழுத்து மூலமாக கையளிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த 5 நாட்களுக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பில் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ள எரிபொருள் விலை மாற்றத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து சங்கங்களின் இணக்கப்பாட்டுடன் ஜூலை 1 முதல் புதிய கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்படும் பஸ் கட்டணத் திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.