பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சல்கள் பதிவு!


பொசன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட கூறுகையில், இதுவரை 18,412 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இவற்றில் ஆய்வுகள் நாளை (30) மற்றும் ஜூலை 1 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொசன் பண்டிகை நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்கள் பொசன் வாரம் முழுவதும் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் பானங்களை வழங்கும் போது பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை பொலித்தீன் பைகளில் சேமிப்பது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பான உணவு கையாளும் முறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் தொடர்பிலும் விழிப்புடன் இருக்குமாறு ஏற்பாட்டாளர்களும் பொதுமக்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பானங்களை வழங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பொருட்கள் தவறாக அகற்றப்படும்போது நுளம்புகள் பெருகும் இடங்களாக மாறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் முறையாக அகற்றப்பட வேண்டும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.