GovPay மூலம் அபராதம் - பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!


GovPay அமைப்பின் மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் எச்சரித்துள்ளது.

வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதற்கும், அபராதங்களைச் செலுத்துவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதற்கும், 2025 ஏப்ரல் மாதத்தில் GovPay கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் அனைத்து ஒன்பது மாகாணங்களிலும் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவையை எளிதாக்கும் வகையில் லங்காபே நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சுமார் 4,000 கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தகுதியான போக்குவரத்து அபராதங்களில் சுமார் 12% GovPay மூலம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சில போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள், சாரதிகள் விடுக்கும் GovPay கோரிக்கைகளை நிராகரித்து, அதற்கு பதிலாக பொலிஸ் நிலையங்களுக்கு வருமாறு அறிவுறுத்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சில அதிகாரிகள் வழங்கப்பட்ட சாதனங்களை எடுத்துச் செல்லத் தவறியுள்ளதோடு, சிலருக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் சேவை மனப்பான்மை குறைபாடுகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அதிகாரி “அந்த அமைப்பு தெரியாது” அல்லது “அந்த வசதி இல்லை” என்று கூறுவது கடமை தவறு மற்றும் ஒழுங்கு மீறலாக கருதப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

GovPay மூலம் அபராதம் செலுத்த அனுமதிக்க மறுக்கும் அதிகாரிகள் தொடர்பில், பொதுமக்கள் 070 4756600 என்ற ஹாட்லைன் இலக்கத்தின் மூலம் முறைப்பாடு அளிக்கலாம் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.