மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் பெருமளவிலான முறைகேடுகள்!


கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பாடசாலை வருகையை அதிகரிக்கவும் அரசாங்கம் பெருமளவில் நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக உணவு வழங்கப்படுவதோடு, சில நாட்களில் மாணவர்கள் உண்ண முடியாத அளவிற்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஊட்டச்சத்து விதிமுறைகளுக்கு முரணான வகையில் குறைந்த செலவில் உணவு தயாரித்து விநியோகிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளில் வழங்கப்படும் உணவின் தரம், சுத்தம் மற்றும் அளவை பரிசோதித்து உறுதிப்படுத்துவது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் பொறுப்பாக இருந்தாலும், குறித்த பாடசாலையின் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் மாணவர்களின் உடல்நலமும் கல்விச் செயல்திறனும் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் உடனடியாக தலையிட்டு முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.