ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் விசேட சந்திப்பு!
ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வு) அவர்கள், நேற்று (26) மொஸ்கோ நகரில் ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் வசிலி ஒஸ்மகோவ் (Vasily Osmakov) அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மொஸ்கோவில் நேற்று (26) முதல் 29ஆம் திகதி வரை நடைபெறும் முதலாவது சர்வதேச பாதுகாப்பு மன்றம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிரேஷ்ட பிரதிநிதிகளின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்புச் செயலாளர் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்கள் குறித்து விரிவாக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
