மின்கட்டண உயர்வு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அருணா கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ரவி கருணநாயக்க எழுப்பிய வாய்மொழி கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண திருத்தத்தின் நேரடி தாக்கம் 180 யூனிட்டுகளுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் ரூபாய் 15 பில்லியன் மானியத்தை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டொலரின் பெறுமதி உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை காரணமாக எதிர்காலத்தில் மின்கட்டண உயர்வு தொடருமா என்ற கேள்விகளும் எழுந்துள்ள நிலையில், தற்போதைக்கு செப்டெம்பர் மாதம் வரை எந்தவொரு புதிய கட்டண உயர்வையும் கோரி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அணுகும் திட்டம் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை, 180 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே தற்போதைய விலை திருத்தத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும், ஏனைய நுகர்வோருக்கான செலவினச் சுமையை அரசாங்கமே ஏற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.