ஆசிரியர்களின் சம்பள உயர்வு - வெளியான முக்கிய தகவல்!


ஆசிரியர் சேவையை நாட்டில் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

வனாதவில்லுவ நாகமடுவ மகா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஆசிரியர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் படிப்படியாக சம்பள உயர்வுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், நாட்டில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க 2021ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இவ்வருடம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் போட்டிப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆட்சேர்ப்புகள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் நடைபெறும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறையால் மாணவர்களின் புறப்பாடச் செயற்பாடுகள் பின்தங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களுக்கு நீச்சல் போன்ற உயிர் பாதுகாப்புத் திறன்களை வழங்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், கல்வி முறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் பாடத்திட்டங்கள் திருத்தப்பட்டுவருவதாகவும், எதிர்காலத்தில் தரம் 09 மாணவர்களுக்காக தேசிய மட்டப் பரீட்சை ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த பரீட்சையின் மூலம் மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்விசார் துறையையோ அல்லது தொழிற்கல்வி துறையையோ தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், இதற்காக சுமார் 50 தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.