திருமணத்திற்கு தயாராகும் தம்பதிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!


உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையில் தற்போது சுமார் 2,500 பேர் தலசீமியா நோயுடன் பதிவாகியுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் 45 முதல் 60 வரையிலான குழந்தைகள் கடுமையான தலசீமியா பாதிப்புடன் பிறந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிரினி அலஹப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

தலசீமியா பரவலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நோயுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 100 ஆக அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தலசீமியா என்பது தொற்றுநோயல்ல என்றும், இது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு மரபணு வழியாக பரவும் ஒரு நோயாகும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனால், திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் அவசியமானதாக சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, குருநாகல், அனுராதபுரம், ராகம மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட அதிக பாதிப்பு பதிவாகியுள்ள மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களை அடையாளம் காணும் விசேட பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், தலசீமியா நோயாளர்களுக்குத் தேவையான குருதி மாற்றீடு மற்றும் மருந்துகள் அனைத்தும் அரசாங்க மருத்துவமனைகள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.