வெசாக் வாரத்திற்காக தளர்த்தப்படும் எரிபொருள் மற்றும் மின்சார விதிமுறைகள்!


புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டு பணிகள் மற்றும் வெசாக் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புத்த ரஷ்மி வெசாக் வலயத்திற்கான இறுதி கட்ட கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்றபோது இந்த விடயங்கள் ஆராயப்பட்டன.

இதன்போது, வெசாக் பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டிற்கு அரசாங்கம் விதித்திருந்த சில கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், வெசாக் வலயத்தை வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகளின் விபரங்களும் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன், கொள்கை வழிபாட்டிற்கு முன்னுரிமை அளித்து, ஆமிச வழிபாடுகள் மூலம் பக்தர்களின் மனங்களை கவரும் வகையில் வெசாக் வலய அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், இம்முறை புத்த ரஷ்மி வெசாக் வலயம் தினமும் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.