அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! - வெளியான அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அரச சேவைக்கான சம்பள உயர்வுகள் இதுவரை மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இன்னும் தீர்வு காணப்பட வேண்டிய பல முக்கிய பிரச்சினைகள் அரச சேவையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்கு வலுவான அரச சேவை அவசியம் என வலியுறுத்தினார். காவல்துறை, முப்படைகள் மற்றும் அரசாங்க அதிபர்கள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை அனைத்து துறைகளிலும் திறமையான மற்றும் வலுவான நிர்வாக அமைப்பு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
