வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் லீசிங் மற்றும் கடன் வசதிகளில் புதிய கட்டுப்பாடுகள்!
வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் லீசிங் மற்றும் கடன் வசதிகளில் மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த திடீர் மாற்றம் காரணமாக வாகன இறக்குமதி மற்றும் விற்பனை துறையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய விதிமுறைகள் காரணமாக எதிர்காலத்தில் வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் வாகன சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைப்பின் நிலைத்தன்மையை பாதுகாக்கவும், கடன் அபாயங்களை கட்டுப்படுத்தவும் மோட்டார் வாகனங்களுக்கான கடன் மற்றும் லீசிங் வசதிகளின் எல்லைகளை நேற்று (25) முதல் மத்திய வங்கி குறைத்துள்ளது.
புதிய திருத்தங்களின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதி 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதிய மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி,
🔹 வர்த்தக வாகனங்களுக்கான லீசிங் வசதி 70% இலிருந்து 60% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
🔹 கார்கள், SUV, வேன்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான லீசிங் வசதி 50% இலிருந்து 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இறக்குமதி செய்யப்பட்டு இன்னும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான கடன் வசதிகளிலும் புதிய சதவீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
📌 புதிய கடன் வரம்புகள்:
▪️ வர்த்தக வாகனங்கள் – 90%
▪️ கார்கள் மற்றும் SUV – 50%
▪️ முச்சக்கரவண்டிகள் – 25%
▪️ இலகுரக ட்ரக் வண்டிகள் – 90%
▪️ ஏனைய வாகனங்கள் – 70%
இதற்கிடையில், மின்சார வாகனங்களுக்கு 90% வரை கடன் வசதி வழங்கப்படும் என்றும், ஹைபிரிட் கார்கள் மற்றும் SUV வகைகளுக்கு 50% வரை கடன் வசதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் காரணமாக பொதுமக்கள் வாகனங்களை வாங்குவது மேலும் சிரமமாகும் என வாகன சந்தை வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன. குறிப்பாக அதிக முன்பணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என்பதால், வாகனங்களின் சந்தை விலையும் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
