கைதான சில நிமிடத்தில் உயிரிழந்த நபர்!


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று இரவு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் வவுணதீவு பொலிஸ் குழுவொன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த நபர் மதுபானம் அருந்தி அடிக்கடி வீட்டில் தகராறு செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவரது மனைவி அளித்த முறைப்பாட்டின் பேரில் நேற்று பொலிஸார் அவரை வீட்டில் வைத்து கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் விசாரணைக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் திடீரென மயக்கமடைந்ததாகவும், உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர் பொலிஸாரால் தாக்கப்பட்டே உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இவரது சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்தவரின் தலையின் பின்புறத்தில் இரத்தக் கசிவு காணப்படுவதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.