அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள்!


அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் நிலவுவதாக பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த மே 23ஆம் தேதி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஸ்வெசும திட்டத்தின் ஆரம்ப கட்ட கணக்கெடுப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வெளி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதால் தவறான தகவல்கள் கணினி அமைப்பில் பதிவாகியுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் விளைவாக, உதவி பெற தகுதியற்ற சிலர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், உண்மையில் உதவி தேவைப்படும் பலர் பட்டியலில் இடம்பெறாமல் தவறவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் IWMS கணினி அமைப்பில் நீண்டகாலமாக தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் சரியான இருப்பிடத்தை கண்டறிய முடியாமை, பதிவேற்றப்பட்ட தகவல்கள் காணாமல் போதல் மற்றும் கணினி மந்தமாக இயங்குதல் போன்ற பிரச்சினைகள் அதிகாரிகளின் பணிகளை கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தரவு சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ரூ.2500 கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கணினி அமைப்பில் ஏற்படும் பிழைகளுக்கான பொறுப்பு பிரதேச செயலாளர்கள் மீது சுமத்தப்படுவதாகவும், கள அதிகாரிகள் மீது தொடர்ச்சியான அழுத்தம் வழங்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் QR கட்டுப்பாடுகள் காரணமாக கிராமங்களுக்கு சென்று தரவுகளை சேகரிப்பதும் மிகவும் சிரமமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாக இந்த பணிகளில் இணைக்கும் திட்டமிட்ட நடைமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும், அஸ்வெசும கணினி அமைப்பை மேம்படுத்தி மின்சார சபை, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், விவசாய சேவை நிலையங்கள் மற்றும் வரித்துறை தரவுகளுடன் இணைத்து பயனாளிகளை துல்லியமாகத் தேர்வு செய்ய வேண்டும் எனவும் சங்கம் பரிந்துரைத்துள்ளது.