ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத் திட்டம்!
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் ஈகைத் திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள் நாளை (28) கொண்டாடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு, மத வழிபாடுகளில் ஈடுபடும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
அதன்படி, விசேட தொழுகைகள் நடைபெறும் பிரதான பள்ளிவாசல்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவைக்கேற்ப பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், தொழுகைக்கு வருகை தரும் முஃமின்களின் போக்குவரத்தை இலகுபடுத்தவும் விசேட போக்குவரத்து திட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்லாமியர்கள் அதிகளவில் கூடும் நகரப் பகுதிகளில் நடமாடும் ரோந்து, மிதிவண்டி ரோந்து, மோட்டார் சைக்கிள் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படவுள்ளன.
புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மூலமும் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், குறிப்பாக தொழுகைகளில் பங்கேற்கும் முஸ்லிம் மக்கள், பொலிஸ் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 / 118 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ அறிவிக்குமாறும் பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
