பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!


எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இடைக்கால பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைக்கு பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதால், அதற்கு முன்னர் இடைக்கால கட்டண உயர்வு அவசியம் என வலியுறுத்தினார்.

அதன்படி, எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 சதவீத பேருந்து கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 32 அல்லது 33 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வின் பின்னர், ஒரு பயணத்திற்கு சுமார் 25 ரூபா நஷ்டத்தில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.