நிவாரணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறுத்தப்படும் – சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!


மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் கட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துக்கு உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், தற்போது வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்கள் அனைத்தும் எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், நாட்டின் நிதி இலக்குகள் எட்டப்பட்டால் மட்டுமே ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் ஊடாக மேலதிக உதவிகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் இலங்கைக்கு உடனடியாக சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படவுள்ளது.

அதன்படி, இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதியுதவி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

அண்மைய அனர்த்தங்களின் தாக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் 5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2026 ஆம் ஆண்டில் 3 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்காலிக சவால்கள் இருந்தபோதிலும், 2027 ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீத முதன்மை உபரி இலக்கை அடைவது உள்ளிட்ட நிதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இலங்கை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.