வைரஸ் காய்ச்சலால் மூடப்பட்ட பாடசாலைகள் : நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!


வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்த பதிரண தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

இதுவரை அந்தப் பாடசாலைகளுடன் தொடர்புடைய 56 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பாக குடிநீர் மற்றும் நீர் பயன்பாட்டின் போது அதிக கவனம் செலுத்துமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.