போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளுக்கும் மீண்டும் விளக்கமறியல்!


தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள், கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பியபோது, அவர்கள் கொண்டுவந்த பயணப்பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ வகை போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, குறித்த பிக்குகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ‘அமிதானந்த’ என்ற பிக்கு இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு தலைமை தாங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அமிதானந்த என்ற பிக்கு கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்து இருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.