சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம்!
சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கான நிதி ஏற்கனவே திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது உரத் தட்டுப்பாடு எதுவும் இல்லை எனவும், இருப்பினும் எதிர்காலத்தில் உர விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் உயர்ந்திருப்பதே இதற்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உர விநியோகம் தடையின்றி தொடரும் என்றாலும் விலை உயர்வு ஏற்படலாம். அந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையை குறைப்பதற்காக அரசு மானியங்களை அதிகரித்து வழங்கி வருகிறது.
அதன்படி, நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 5,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருவதாகவும், அது 2 ஹெக்டேருக்கு வரை வழங்கப்பட்டால் 10,000 ரூபாய் கிடைக்கும் எனவும் அவர் கூறினார். போர்ச் சூழ்நிலை காரணமாக இந்த மானியம் மேலதிகமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் 5,000 ரூபாய் மேலதிக மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
