தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!


புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இலங்கையும் தமிழ்நாடும் நீண்டகால வரலாற்று, கலாசார, வர்த்தக மற்றும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த உறவுகள் இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் தற்போது மேலும் வலுவான நட்புறவுகளையும் மூலோபாய கூட்டாண்மையையும் கட்டியெழுப்பி வரும் நிலையில், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பரஸ்பர முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகள் உருவாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், வலுவான இந்தியா – இலங்கை கூட்டாண்மைக்குள் இணைந்து செயல்படுவதன் மூலம், இரு நாடுகளும் மேலும் உயர்ந்த செழிப்பையும் நிலையான முன்னேற்றத்தையும் அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜயின் தலைமையில், தமிழ்நாடு மேலும் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காணும் எனவும் ஜனாதிபதி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதியாக, தமிழக மக்களுக்கும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கும் இலங்கை மக்கள் சார்பாக தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.