நாட்டில் மீண்டும் தலைதூக்கும் யானைக்கால் நோய்!
இலங்கையில் யானைக்கால் நோய் தொடர்பான அச்சம் மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக 68 பேருக்கு யானைக்கால் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இதில் 34 பேர் இலங்கையர்கள் எனவும், மேலும் 34 பேர் இந்தியாவில் இருந்து தொழிலுக்காக இலங்கைக்கு வந்து நீண்டகாலம் தங்கியிருந்தவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யானைக்கால் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க தெரிவிக்கையில், ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய 7 மாவட்டங்களில் இந்த நோய் அதிகளவில் பதிவாகியுள்ளதாக கூறினார்.
மேலும், “2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இருந்து யானைக்கால் நோயை முற்றிலும் ஒழிப்பதே எங்களின் இலக்காகும். நாட்டில் ஒரே ஒரு நோயாளியும் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்புகள் எச்சரித்துள்ளன.
