பொலிஸாரிடமிருந்து தப்பிக்க ஹெரோயினை பொலித்தீன் பொதியுடன் விழுங்கிய இளைஞன் வைத்தியசாலையில்!


யாழ்ப்பாணத்தில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கியதாக கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், நேற்றைய தினம் 2 கிராம் ஹெரோயினுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட அவர் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பொலிஸார் தன்னை கைது செய்ய வந்தபோது சுமார் 10 கிராம் ஹெரோயினை பொலித்தீன் பொதியுடன் விழுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், குறித்த இளைஞர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.