பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!


இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

உயர் ஸ்தானிகர் நய்யார் நசீரின் இலங்கைப் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், காலநிலை மாற்றத்தால் உருவாகும் அனர்த்தங்கள் தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாக மாறிவருவதை இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர். அவற்றை சமாளிப்பதற்குத் தொழில்நுட்ப ரீதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக மேம்பட்ட தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், “இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டார். இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.