இலங்கை ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் விஜய்!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தச் செய்தியில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம் மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான உறவுகளைப் பகிர்ந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில், “இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துகளால் நான் மிகுந்த கௌரவமடைந்துள்ளேன். தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.
