அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு விஜயம்!


பெலாரஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் மெக்சிம் ரைசென்கோவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மே 12 முதல் 15 ஆம் திகதி வரை பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கை மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

மின்ஸ்க் நகரில் நடைபெறும் இந்த விஜயத்தின் போது, அமைச்சர் விஜித ஹேரத், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்திக்கவுள்ளார். மேலும், பெலாரஸ் வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பெலாரஸின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பெலாரஸின் தேசிய ஏற்றுமதி மையம் ஏற்பாடு செய்துள்ள வணிக மற்றும் சுற்றுலா தொடர்பான வட்டமேசை மாநாட்டில் அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றவுள்ளார். அத்துடன், பெலாரஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.