தெனியாய மாணவர்களிடையே பரவும் வைரஸ் ; சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே ஒரு வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுவர் நல விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் மகேஷக விஜயவர்தன தெரிவித்ததாவது, இந்த வைரஸ் அசுத்தமான கைகள், உணவு, நீர், சுவாசத் துளிகள் மற்றும் வைரஸ் படிந்துள்ள மேற்பரப்புகளைத் தொடுதல் மூலம் எளிதில் பரவக்கூடும் எனும் நிலை உள்ளது.
தெனியாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை (ஒளி அசௌகரியம்), சத்தங்களைத் தாங்க முடியாமை மற்றும் கழுத்து விறைப்பு போன்ற அறிகுறிகள் பதிவாகியுள்ளன.
இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் கை சுகாதாரம் மிக முக்கியமானதாக இருப்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. சவர்க்காரம் பயன்படுத்தி முறையாக கைகளை கழுவுவது அதிக பாதுகாப்பை வழங்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், துண்டுகள், உணவுப் பாத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கும் பொதுஇடங்களுக்கும் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைந்த பின்னரும் பல வாரங்கள் அவர்களின் சுவாசச் சுரப்புகள் மற்றும் மலம் வழியாக வைரஸை வெளியேற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதால், நீண்ட காலத்திற்கு கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
