விஜயை யாழ்ப்பாணத்தை ஆள்வதற்கு எம்.பி. அர்ச்சுனா அழைப்பதானது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயல் : தேரர் கடும் எச்சரிக்கை!


ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், யாழ்ப்பாணத்தை ஆளுவதற்காக தமிழக நடிகர் விஜயை அழைப்பது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயல் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முப்பது வருட கால யுத்தத்தில் முப்படைகளும் உயிரைப் பணயம் வைத்து வடக்கை மீட்டெடுத்தன. அந்த இருண்ட காலத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்க வேண்டாம். சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கினால் எவரும் தப்ப முடியாது என அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா குறித்து கருத்து வெளியிட்ட அவர், “அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன். இதே கருத்துகளை அவர் வெளியில் பேசியிருந்தால் வீதியில் கூட நடமாட முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தளபதி விஜய் எங்கள் நாட்டை நோக்கி விரல் நீட்ட வேண்டாம். நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான்; முழு இந்தியாவின் தலைவரோ அல்லது பிரதமரோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுச் செயல்பாடுகளில் தலையிட முயன்றால், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மத்திய வங்கியின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார். அது உண்மையானால் அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் 1988 மற்றும் 1989 காலப்பகுதியில் இடம்பெற்ற அடக்குமுறைகளை நினைவுபடுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்று வேளை உணவு உண்ட மக்கள் இன்று இரண்டு வேளை மட்டுமே உணவருந்தும் அவலநிலை கிராமங்களில் ஏற்பட்டுள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ குடும்பத்தின் பணம் உகாண்டாவில் இருப்பதாக கூறியவர்கள், தற்போது ஏன் அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக இளைஞர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

சிங்கள புத்தாண்டு போன்ற கலாசார நிகழ்வுகளை புறக்கணிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கோயில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றார் என்றும் அவர் விமர்சித்தார்.

மக்களின் வரிப்பணத்தில் வாழ்பவர்கள் இன்று மக்களின் இரத்தத்தையே உறிஞ்சிக் குடிக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்க வேண்டியவர்கள் இன்று வெளியில் சுதந்திரமாக உலவுகின்றார்கள் என்றும், அரசு சிங்கள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் சீலரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.