போதைப்பொருள் கடத்தல்காரர்கள் - ஜனாதிபதி கடும் எச்சரிக்கை!
இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையின் கூட்டத்திலேயே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் சமூகத்துக்குள் செல்லாதவாறு தடுப்பது அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தினார். அவற்றை சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை கிடைத்த முன்னேற்றங்கள் தொடர்பாக கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அதன்படி, ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 460 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், சுமார் 5437 கிலோ கஞ்சா, 1936 கிலோ ஹெரோயின், 1991 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுற்றிவளைப்புகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு திருத்தச் சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க சுயதொழில் பயிற்சிகள் மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தித் திட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காக தனியான நீதிமன்றம் அமைப்பது மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்று வழக்குத் தொடர்வதை துரிதப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்காக போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடைபெறும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்கும் நோக்கில் கல்வி அமைச்சும் மகளிர் பணியகமும் இணைந்து விசேட திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், ஜூன் 26 ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இக்கூட்டத்தில் மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
.jpeg.jpg)