ஒன்லைன் கொரியர் சேவை ஊடாக நூதன முறையில் போதைப்பொருட்கள் விநியோகம்!


யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில், நூதன முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை 1800 போதை மாத்திரைகளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் போதை ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் தகவலின்படி, யாழ் நகரப் பகுதியில் “ஒன்லைன் கொரியர் சேவை” ஊடாக மறைமுகமாக போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனவிரத்னவின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வில், கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட பார்சல் ஒன்று யாழ் குருநகர் தபால் நிலையத்திற்கு வந்திருந்தது கண்டறியப்பட்டது.

அந்தப் பொதியை சோதனையிட்ட பொலிஸார், அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1800 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.

மேலும், அந்த மாத்திரைகளை பெற்றுக்கொள்ள வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபரும் அதே இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.