இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை!


இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக விஜய் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பளித்தனர். பின்னர், சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்த விஜய், பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். சுமார் 20 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளதாக விஜய் சுட்டிக்காட்டினார்.

மேலும், 2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 12 கைது சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த 58 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 266 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழக மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிப்பதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கைகளால் எல்லையோர மீனவக் குடும்பங்கள் அச்சத்திலும், வாழ்வாதார நெருக்கடியிலும் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.