சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
முல்லைத்தீவு பொதுச் சந்தைக்கு அருகில் சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, முல்லைத்தீவு பொது சுகாதார பரிசோதகர் பிரவீன் மற்றும் தண்ணீரூற்று பொது சுகாதார பரிசோதகர் கஜலவன் ஆகியோர் இணைந்து முல்லைத்தீவு நகரை அண்மித்த உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகளின் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔺 சுகாதாரமற்ற சூழலில் உணவு தயாரித்தல்
🔺 ஈக்கள் மொய்த்த நிலையில் உணவுகளை விற்பனை செய்தல்
🔺 பாத்திரங்களை சுத்தமாக பராமரிக்காதல்
🔺 மருத்துவ சான்றிதழ் இன்றி ஊழியர்கள் உணவுகளை கையாளுதல்
போன்ற பல குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (25) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு உணவகத்திற்கு ரூ.50,000 மற்றும் மற்றொரு உணவகத்திற்கு ரூ.40,000 வீதம் மொத்தமாக ரூ.90,000 அபராதம் விதித்ததுடன், இரு உணவகங்களையும் சீல் வைக்க அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த இரு உணவகங்களையும் நேற்று (25) அதிகாரப்பூர்வமாக சீல் வைத்துள்ளனர்.
மேலும், பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் திடீர் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
