எரிபொருள் விலை உயர்வு அவசியம் - பொருளாதார ஆய்வாளர் எச்சரிக்கை!


அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஒரு லீற்றர் டீசலின் விலையை சுமார் ரூ.600 வரை உயர்த்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (25) இரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

டீசல் விலையை தற்போதைய நிலையில் தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி வைத்தால், இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அதன் விளைவாக மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பொருளாதாரச் சுழற்சியே கடந்த காலங்களில் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு நேரடியாக பணவீக்கத்தை பாதிக்கும் என்பதால், அதனை சமநிலைப்படுத்த மானியக் கொள்கை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவரது கருத்துப்படி, எரிபொருள் மானியம் அனைவருக்கும் வழங்கப்படாமல், உண்மையில் தேவையுள்ள மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களுக்கு அவர்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் டீசல் மானியம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

பணக்காரர்களுக்கு மானியம் வழங்குவதை விட, பொதுப் போக்குவரத்தை நம்பி வாழும் சாதாரண மக்களுக்கு உதவுவது நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.